செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
திருப்போரூரில், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், தி.மு.க., ஆட்சியில் படவட்டம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், குமரன் நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த திருப்போரூர் அரசு மருத்துவமனையில், இப்போது, 'எக்ஸ்-ரே' இயந்திரம் சரியாக செயல்படுவதில்லை. போதிய டாக்டர்களும் இல்லை.
இதனால், 30 கி.மீ., தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் - நெம்மேலி சாலை, ஒருவழிச்சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கு காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 9ம் தேதி காலை 10:00 மணியளவில், திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.