காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில், வரும் 29ம் தேதி ஆடிகிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோவில் களில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு உள்ளிட்டவற்றுக்கான ஏற்பாட்டை கோவில்நிர்வாகம் செய்து வருகிறது.
ஆடி கிருத்திகையையொட்டி, பக்தர்கள் முருகப்பெருமானுக்கு மூங்கில் கூடையில், பூக்கள், பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை காவடி எடுத்து சென்று முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர்.
இதையொட்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகில், காவடி கூடைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
ஒரு ஜோடி மூங்கில் கூடை அளவுக்கேற்ப 500 - 600 ரூபாய்க்கும், நான்கு பித்தளை மணி, கொக்கியுடன் கூடிய மரச்சட்டம் உள்ளிட்ட, ஒரு செட் காவடி கூடை, 900 - 1, 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. போதுமான வியாபாரம் இல்லாததால், நடப்பு ஆண்டு விலையை உயர்த்த வில்லை. கடந்த ஆண்டும் இதே விலைக்கு தான் விற்பனை செய்தோம்என, வியாபாரிகள் தெரிவித்தனர்.