காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நீர் வரத்தை பெற்று கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.
குறிப்பாக, குன்றத்துார் தாலுக்காவில், படப்பை பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 39 ஏரிகள் உள்ளன. இதில், சோமங்கலம் ஏரி, படப்பை ஏரி, ஆதனஞ்சேரி ஏரி, வடக்குப்பட்டு ஏரி, மலைப்பட்டு ஏரி உள்ளிட்ட 21 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டி கலங்கல் வழியே உபரி நீர் வெளியேறுகிறது.
மணிமங்கலம் ஏரி 95 சதவீதமும், மற்ற ஏரிகள் 70 சதவீதத்திற்கு மேல் நிரம்பி காணப்படுகிறது. கன மழை மற்றும் ஏரி நீர் வெளியேற்றத்தால், அடையாறு கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
இதேபோல, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், ஸ்ரீபெரும்புதுார் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 98 ஏரிகள் உள்ளன.
இதில், எறையூர் ஏரி, குண்டுபெரும்பேடு ஏரி, ராமானுஜபுரம் ஏரி, சிவன்கூடல் ஏரி உள்ளிட்ட 7 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மற்ற ஏரிகள் 50 - 70 சதவீதத்திற்கு மேல் நிரம்பி காணப்படுகிறது. ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.