இந்திய வலு துாக்கும் கூட்டமைப்பு மற்றும் மத்திய பிரதேச வலு துாக்கும் சங்கம் சார்பில், தேசிய அளவிலான மாஸ்டர் வலு துாக்கும் போட்டி, ம. பி. , மாநிலத்தில் கடந்த 21ல் துவங்கி நடந்து வருகிறது.
இதில், 40 - 49, 50 - 59, 60 - 69 வயது மற்றும் 1954ம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்கள் என, நான்கு மாஸ்டர்கள் பிரிவுகளில், போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு எடை பிரிவு வாரியாக, 'ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், மற்றும் டெட் லிப்ட்' ஆகிய மூன்று விதமான போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வலு துாக்கும் சங்கம் சார்பில், சென்னை மாங்காடைச் சேர்ந்த அமுதசுகந்தி பாபு, 42, என்ற வீராங்கனை, 69 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். இவர், ஸ்குவாட் - 155 கிலோ, பெஞ்ச் பிரஸ் - 90 கிலோ, டெட் லிப்ட் பிரிவில் - 157. 5 கிலோ மற்றும் ஒட்டுமொத்தா 402. 5 கிலோ எடைக்கு என, நான்கு தங்க பதக்கங்களை வென்று அசத்தினர். தவிர, 'பெஸ்ட் லிப்டர்' என்ற பட்டமும் வென்று சாதனை படைத்தார். இன்று சென்னை திரும்பு சென்னை வீராங்கனையருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.