மேடவாக்கத்தில் உள்ள இரு மேம்பாலத்திலும், தமிழக நெடுஞ்சாலைத் துறை எவ்வித பராமரிப்பும் செய்யவில்லை. இதனால், மண் படுகைகள் அதிகரித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்திக்கின்றனர்.
பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் சந்திப்பில் நிலவிய கடும்
போக்குவரத்து நெரிசலால், அங்கு இரு மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கீழ் கட்டப்பட்ட இவ்விரு பாலங்களும், கடந்த ஆண்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
இவ்விரு மேம்பாலங்களை பராமரிக்கும் பொறுப்பும் தமிழக நெடுஞ்சாலைத் துறை வசமே உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நிர்வாகம், மேம்பாலத்தை சரியாக பராமரிப்பதில்லை.
இதனால், இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஒளிராமல் இருளடைந்து காணப்படுகிறது. மேம்பாலம் முழுதும் மண் படுகை நிறைந்துள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் மண் படுகைகளில் சறுக்கி விழுந்து, அடிக்கடி விபத்துக்களை சந்திக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மூன்று உயிர் பலியும் நிகழ்ந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், வாரம் ஒருமுறையேனும் மேம்பாலத்தை பராமரித்து, மண் படுகைகளை நீக்கி, மின் விளக்குகளை ஒளிரச் செய்து, பாதுகாப்பான பயணத்திற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என, இரு சக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.