செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டல் வளாகத்தில் உள்ள பூம்புகார் நகர்புற கண்காட்சித் திடலில், மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகம் இணைந்து "காந்தி சில்ப் பஜார்" என்ற பெயரில் கைவிணை பொருட்கள், கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனையை ஒரு வார காலத்திற்கு நடத்துகிறது.
இந்த கண்காட்சியை மத்திய அரசு ஜவுளித்துறையின் அபிவிருத்தி ஆணையர் (கைவிணை பொருட்கள்) கே. தனராஜன், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி முதல்வர் கே. ராமன் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார். கண்காட்சியில் கற்சிற்பங்கள், பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், நூல் தையல் பொருட்கள், காகிதக்கூல் பொருட்கள், தேங்காய் ஓடு மற்றும் நார்களில் செய்யப்பட்ட கலை பொருட்கள், சுடுமண் சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், தோல், ஜூட் பைகள், பலவகை நகைகள், நறுமண பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் ஸ்டால்கள் இடம் பெற்று இருந்தது.
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இதை பார்த்து வாங்கி செல்வார்கள் என தெரிகிறது. வரும் டிச. 29 வரை, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.