சிட்லப்பாக்கத்தில், சாலையில் தேங்கும் மரக்கழிவு போன்ற குப்பையை எடுப்பதிலும், மழைநீர் கால்வாய்களை துார் வாருவதிலும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்களிலும் சேகரமாகும் குப்பையை அகற்றும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதில், மூன்றாவது மண்டலம், செம்பாக்கத்தில் முறையாக குப்பை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செம்பாக்கம் சீனிவாசா நகர் ஆறாவது தெரு, பார்வதி நகர் இரண்டாவது தெருக்களில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது.
இதனால், அங்கு டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சிட்லப்பாக்கத்தில் பெரியார் தெரு, அரவிந்தர் தெரு, விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், சாலைகளில் தேங்கியுள்ள மரக்கழிவுகள், பல வாரங்களாக அகற்றப்படாமல் உள்ளன.
அப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களை முறையாக துார் வாராததால், பிளாஸ்டிக் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை பெய்தால், கால்வாய்கள் நிரம்பி, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துவிடும் என்பதில் மாற்றமில்லை.
இது தொடர்பாக, மாநகராட்சியில் பல முறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழை பெய்து, வெள்ள பாதிப்பு ஏற்படும் முன், சிட்லப்பாக்கத்தில் துார் வாரப்படாமல் உள்ள கால்வாய்களை துார் வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.