மறைமலை நகர் காவல் நிலையத்தில் பாழாகும் பறிமுதல் வாகனங்கள்

85பார்த்தது
மறைமலை நகர் காவல் நிலையத்தில் பாழாகும் பறிமுதல் வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி என். ஹெச். , 2 பெரியார் சாலையில், மறைமலை நகர் காவல் நிலையம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில், மறைமலை நகர், கருநிலம், சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட புறநகரின் முக்கிய பகுதிகள் உள்ளன.

இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், காவல் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்திலும், பெரியார் சாலையோரமும் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள், தற்போது துருப்பிடித்து கொடிகள் படர்ந்து வீணாகி வருகின்றன.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: பெரியார் சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். சாலையோரம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்ட அந்த இடம் புதர் மண்டி காணப்படுவதால், விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது.

மேலும் அரசுக்கு சொந்தமான இடம் தற்போது வீணாகி வருகிறது. எனவே, இந்த வாகனங்களை கணக்கிட்டு, முறையாக ஏலம் விட்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், இந்த காலி இடத்தில், மறைமலை நகர் போலீசாரின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள காவலர் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி