காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி மற்றும் மைதானத்தை சுற்றி கால் நடைகள் நுழையாமல் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச் சுவர் அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது, பள்ளி மைதானம் பராமரிக்கப்படாததால் புல்கள், செடிகள் வளர்ந்து உள்ளது.
இதனால், விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறும் அபாயநிலை உள்ளது. உடற்கல்வி பாடப்பிரிவு போது கூட, மாணவர்கள் மைதானத்தில் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். அரசு பள்ளியில் மைதான வசதி இருந்தும் முறையாக பராமரிக்காததால் வீணாகி வருகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மைதானத்தில் உள்ள செடிகளை அகற்றி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.