காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டிவாக்கம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் பொதுக்குளம் உள்ளது. கடந்த ஆண்டுகளில், இக்குளம் அப்பகுதிக்கான குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. பாலாற்று குடிநீர் வசதி ஏற்பட்டதன் பின், நிலத்தடி நீர் மட்டம் ஆதாரமாகவும், தற்போது கால்நடைகளின் நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், சில ஆண்டுகளாக இக்குளம் முறையான பராமரிப்பின்றை காரணமாக முழுக்க பாசி படர்ந்து, பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.
மேலும், சமீப காலமாக அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்தக் குளத்தில் கலந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பு, தொற்று நோய் போன்றவைக்கு இக்குளத்து நீர் வழிவகுப்பதாக உள்ளது. குளத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால், குளத்தைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதோடு, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி, சுகாதாரமான முறையில் பராமரிக்க, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.