காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டையை சுற்றியுள்ள சாலியர் தெரு, நடுத் தெரு, கவரை தெரு, பி. எஸ். கே. , தெருக்களில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன.
கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிவதால், இத்தெருக்களில் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர், இவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர்.
இப்பகுதிக்கு புதிதாக வருவோரை தெரு நாய்கள் குரைத்தபடியே விரட்டிச் செல்கின்றன. மேலும், தெருக்களில் உள்ள குப்பையை நாய்கள் கிளறும்போது, உணவுக்காக ஒன்றுக்கொன்று சண்டை ஏற்பட்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடும் தெருநாய்களால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேக்குபேட்டையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.