செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சொமேட்டோ நிறுவன பகுதி நேர டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் வேல்முருகன் (24). இவர் மறைமலைநகர் பகுதியில் தங்கும் அறை வாடகைக்கு எடுத்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வேல்முருகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு பணம் சேர்ப்பதற்காக அவர் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனத்தின் விடுமுறை தினத்தில் zomato நிறுவனத்தின் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். சொமேட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது, சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து திருக்கச்சூர் நோக்கி ஒரகடம் செல்லும் சாலையில் உணவு டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் எர்ணாகுளத்தில் இருந்து ஒரகடம் நோக்கி இரு சக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரியின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.