மதுராந்தகம் அடுத்த மோச்சேரி, பொன்னியம்மன் கோவில் குளக்கரையின் மீது, 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர், 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இதனால், மாற்று இடம் கேட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ந்து தாசில்தார் மற்றும் கலெக்டருக்கு மனு அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழைக்காலம் என்பதால், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், நேற்று மதுராந்தகம் தாசில்தார் அலுவலகத்தின் முன், 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் கூடி, வாழ்வதற்கு மாற்று இடம் வழங்கக்கோரி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருக்கும் போராட்டம் நடத்திய இருளர் இன மக்களிடம், மதுராந்தகம் தாசில்தார் துரைராஜன் பேச்சு நடத்தினர்.
இதில், சிலாவட்டம் அடுத்த கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில், இலவச வீட்டு மனை மற்றும் பட்டா வழங்குவதாக, தாசில்தார் துரைராஜன் உறுதியளித்தார்.
அதனால், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இருளர் இன மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.