காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. இக்கால்வாயின் இருபுறமும், 40 கோடி ரூபாய் செலவில், புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், ஒரு பகுதியாக ஆனந்தாபேட்டையில் இருந்து திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள மஞ்சள்நீர் கால்வாயில் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், கால்வாயின் மற்றொரு கரையான உப்புகுளம், சொக்கம்மாள் நகருக்கு செல்லும் சாலையோரம் மஞ்சள்நீர் கால்வாயில் ஏற்கனவே இருந்த பழைய தடுப்புச்சுவர் அகற்றப்பட்டதால், மண் சரிவு ஏற்பட்டு சாலையின் அகலம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், அப்பகுதியில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், கால்வாயோரம் அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. சாலையோரம் தடுப்பும் அமைக்கவில்லை. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் நிலைதடுமாறி கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.