காஞ்சிபுரம் மாநகராட்சி, படவேட்டம்மன் கோவில் அருகே, பல்லவன் தெருவில், பஞ்ச சக்தி விநாயகர் கோவில் உள்ளது. அப்பகுதியினரால் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு வழிபாட்டில் இருந்தது.
தனியார் அரிசி ஆலைக்கு செல்லும் வழியில், மாநகராட்சி இடத்தில் இக்கோயில் இருந்தது. கோயிலால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் இருப்பதாக, அரிசி ஆலை உரிமையாளர்கள் தர்மராஜன் மற்றும் பழனிவேல் ராஜகுமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம், இரவு 1: 00 மணியளவில், போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை ஜே. சி. பி. , உதவியுடன் இடித்து அகற்றியது. இதை கண்டித்து, பல்லவன் தெருவைச் சேர்ந்தோர் மற்றும் பா. ஜ. , வினர் சிலர், போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தாசில்தார் சத்யா ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவில் அகற்றம் குறித்து, அதிகாரிகள் விளக்கிய பின், அவர்கள் கலைந்து சென்றனர். கோவிலில் இருந்த வழிபாட்டு விநாயகர் சிலையை, வருவாய் துறையினர், தாலுகா அலுவலகம் எடுத்துச் சென்றனர்.