ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தற்கொலை படைத்தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக புல்வாமாவில் பள்ளி, கல்லூரி வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியதால் ஜம்மு காஷ்மீர் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்ல அனுமதித்துள்ளது. இதையடுத்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஏற்பாட்டின் பேரில் புல்வாமாவில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 100 பேர் மாமல்லபுரம் சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், ஐந்துரதம் உள்ளிட்ட பராதன சின்னங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்தனர். முதல், முறையாக மாமல்லபுரம் சுற்றுலா வந்த ஜம்மு காஷ்மீர் கல்லூரி மாணவர்களுக்கு மாமல்லபுரம் பல்லவர் கால புராதன சின்னங்களின் வரலாற்று தகவல்கள், ஒவ்வொரு குடைவரை சிற்பங்களின் சிறப்புகள், அதன் வரலாற்று பின்னணி குறித்து இந்தி மற்றும் உருது மொழியில் சுற்றுலா வழிகாட்டிகள் விளக்கி கூறினர்.