சென்னை - மாமல்லபுரம் இடையே, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. துவக்கத்தில், இருவழித் தடமாக இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன், இத்தட பகுதியில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் பெருகியதைத் தொடர்ந்து, கடந்த 2001ல், நான்கு வழியாக இத்தடம் மேம்படுத்தப்பட்டது.
பின், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து, அடையாறு மத்திய கைலாஷ் பகுதி துவங்கி, சிறுசேரி பகுதி வரை, ஆறு வழியாக மேம்படுத்தி, கட்டண சாலையாக நிர்வகிக்கப்படுகிறது.
சிறுசேரி துவங்கி மாமல்லபுரம் வரை, நான்கு வழி பாதையே உள்ளது. ஆறு வழிப் பாதையாக மேம் படுத்தும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இப்பகுதி சாலையில் குறுக்கிடும் கால்வாய்களில், குழாய் பாலமே அமைக்கப்பட்டது. மழையின்போது ஏற்படும் வெள்ளப் பெருக்கு, குறுகிய குழாய் பாலம் வழியே கடந்து, பகிங்ஹாம் கால்வாயை அடைவது சிக்கலாக உள்ளது.
அதனால், சாலையின் மேற்புறம் வெள்ளம் சூழ்கிறது. இப்பாதிப்பை தவிர்க்க, அகலமான கான்கிரீட் பாலமாக மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை சார்பில் கான்கிரீட் பாலங்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.