அச்சிறுபாக்கம் அடுத்த கரசங்கால் பகுதி ரயில் நிலையம், 2013 முதல் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த ரயில் நிலையத்தில், விழுப்புரம் பேசஞ்சர், திருப்பதி பேசஞ்சர் ரயில்கள், இரு மார்க்கத்திலும் நின்று சென்றன.
இந்த ரயில் நிலையம் ரத்தானதால், கரசங்கால், நெடுங்கல், முருங்கை, களத்துார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மீண்டும் ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையமாக அறிவிக்கப்பட வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு, ரயில் பயணியர் காத்திருக்கும் நடைபாதை கூரை மற்றும் நடைபாதையை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், ஜே. சி. பி. , இயந்திரங்களுடன், மீண்டும் நடைபாதை கூரையை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், பொதுமக்களிடம் பேச்சு நடத்திய போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின், ரயில் நிலையத்தில் இருந்த கூரை மற்றும் நடைபாதையை அகற்றும் பணியில், ரயில்வே துறையினர் ஈடுபட்டனர்.