செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கக்கிலப்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, சாலையின் இரு மார்க்கத்திலும், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், மதுராந்தகத்திலிருந்து கக்கிலப்பேட்டை வழியாக வேடந்தாங்கல், உத்திரமேரூர் பகுதிக்கு செல்லும் புறவழிச் சாலையில் உள்ள நிழற்குடை அருகே, புறவழிச் சாலை முழுதும் தனியார் வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து வரும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள், கக்கிலப்பேட்டையில் உள்ள பயணியர் நிழற்குடையில் நிறுத்தப்படுவதில்லை.மாறாக, மதுராந்தகத்திலிருந்து கக்கிலப்பேட்டை வழியாக திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை சந்திப்பில் பேருந்துகளை நிறுத்துகின்றனர்.
இதனால், சாலையை கடப்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சில சமயங்களில், விபத்தில் சிக்கி மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி, பயணியரை ஏற்றி செல்வதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.