செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
கடற்கரை கோயில், ஐந்தரதம், அர்ச்சுனன் தபசு, கணேச ரதம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகளில் சுற்றிப் பார்த்த பயணிகள், பிறகு கார், வேன், இரு சக்கர வாகனங்களில் மாமல்லபுரத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது மாமல்லபுரம் அடுத்த ஈ.சி.ஆர். பூஞ்சேரி நான்கு முனை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 300-க்கும் மேற்பட்ட கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமல் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை சாலையில் இயக்கியதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து ஆமை வேகத்தில் சென்றன. இதனால் மாமல்லபுரம்- புதுச்சேரி ஈ.சி.ஆரில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்றன. பிறகு அங்கு போக்குவரத்து காவலர்கள் விரைந்து வந்து, போக்குவரத்தைச் சரிசெய்தபிறகே 2 மணி நேரம் கழித்தே ஈ.சி.ஆரில் போக்குவரத்து சீரானது.