காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மல்லியங்கரணை கிராமத்தில் பழமையான அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் மற்றும் பொன்னியம்மன் ஆலயம் உள்ளது.
இதில் மாரியம்மன் ஆலயம் சிறிய ஆலயமாக இருந்த நிலையில் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பெரிய ஆலயமாக எழுப்பி ஆலயத்தில் புதிய அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்து இன்று கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹூதி, தீபாராதனைகள் உள்ளிட்ட யாக கால பூஜைகள் நடைப்பெற்றது.
அதைத்தொடர்ந்து, மேளதாள வாத்தியங்களுடன் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் கடம் புறப்பட்டு மாரியம்மன் ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தில் புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழா நடந்தேறியது. பின்னர், பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதனை அடுத்து, கிராம தேவதையாக மக்கள் வழிபடும் பொன்னியம்மன் ஆலய கும்பாபிஷேகமும் விமர்சையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் மல்லியங்கரணை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.