காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ரெட்டிப்பாளையம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், ரெட்டிப்பாளையம் -- பாலுார் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளி வளாகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன், மாணவர்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக, கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால், நாளடைவில் பயன்பாடு இன்றி வீணானது. தற்போது, கட்டடம் முழுதும் சிதிலமடைந்து, புதர் மண்டி காணப்படுகிறது.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்த கட்டடம் உள்ளதால், பெற்றோர் தங்களின் குழந்தைகளை அச்சதுடனேயே பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
குழந்தைகள் அந்த பகுதிக்கு செல்லாமல் தடுத்து கண்காணிக்கும் பணியையும் ஆசிரியர்கள் கூடுதலாக செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளதால், பள்ளி வளாகத்தில் பாழடைந்த கழிப்பறை கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.