காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (35). இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். வீட்டிலிருந்து தினமும் பைக்கில், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்து ரயிலில் தலைமைச் செயலகத்திற்கு பணிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று (ஜனவரி 1) அதிகாலை, 5:00 மணிக்கு, பணிக்கு செல்ல, 'ஹோண்டா' பைக்கில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே, அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது, ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம், இவரின் டூ-வீலர் பின்பக்கம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால், பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து அவர் மீது ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோர விபத்தை நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.