கல்பாக்கம், புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவராக, அ. தி. மு. க. , வைச் சேர்ந்த காதர் உசேன் உள்ளார். கடந்த மாதம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடைகளின் ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.
இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, செப். , 21ல் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆதரவான வியாபாரிகள், தி. மு. க. , பிரமுகரும், ஊராட்சி முன்னாள் தலைவருமான பக்கீர் முகமதுவை, வணிகர் சங்கத்தின் தற்காலிக தலைவராக நியமித்துள்ளதாக பிரசாரம் செய்தனர். சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவின் ஒப்புதலின்றி தலைவரை தேர்ந்தெடுக்க இயலாது என்றும், தானே தற்போதும் தலைவராக நீடிப்பதாகவும், தலைவர் காதர் உசேன் தெரிவித்தார்.
இந்நிலையில், சங்க செயற்குழு கூட்டம், தலைவர் காதர் உசேன் தலைமையில், நேற்று நடந்தது. செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
ஊராட்சி நிர்வாக நடவடிக்கைக்கு சாதகமாக செயல்பட்ட வியாபாரிகள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.
ஆனால், பக்கீர் முகமது சங்கக் கூட்டத்திற்கு வந்தார். அவரால் பிரச்னை ஏற்படலாம் என கருதிய நிர்வாகிகள், கல்பாக்கம் போலீசாரை வரவழைத்தனர்.