சென்னை, கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், 55, லலிதா, 62, காமேஷ், 47, அபிஷேக், 26, ஆகிய நான்கு பேர், ஹோண்டா ஈடியாஸ் காரில், திண்டிவனம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தனர்.
மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை பகுதி, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் மார்க்கத்தில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், மயிலை அடுத்த மந்தைவெளி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 29, என்பவர், விழுப்புரம் பகுதியிலிருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதில், மேலவலம்பேட்டை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் மோதி, எதிர் திசையில் சென்னை நோக்கி சென்ற லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த லோகநாதன், 55, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், படுகாயம் அடைந்த லலிதா, அபிஷேக், காமேஷ் ஆகியோரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் லலிதா உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார், விசாரித்து வருகின்றனர். "