காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கூட்டுச்சாலையில் இருந்து, புத்தகரம், மருதம் கிராமங்கள் வழியாக ராஜகுளம் சென்றடையும் சாலை உள்ளது. வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியினர் மற்றும் செங்கல்பட்டு, ஒரகடம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரைவாக செல்வதற்கு, இக்கிராம சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இச்சாலையை பயன்படுத்தி, கார், இருசக்கர வாகனங்கள் வழியாக குறைந்த நேரத்தில் எளிதாக சென்னை - பெங்களூரு சாலையை அடைந்து, அங்கிருந்து பல பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். இந்நிலையில், இச்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, இரு ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இச்சாலை வழியாக இரவு, பகலாக பயணிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, புத்தகரத்தில் இருந்து மருதம் வழியாக ராஜகுளத்தை சென்றடையும் இணைப்பு சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.