மின்னல் சித்தாமூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படாததால், விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அச்சிறுபாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்கு உட்பட்டு, கீழ்பட்டு கிராமம் உள்ளது. இப்பகுதியில், 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், ஒரத்தி- - தொழுப்பேடு மாநில நெடுஞ்சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளாக, உரிய பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தை சுற்றி விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்குமிடமாக உள்ளது.
நிழற்குடையை சீரமைக்க வேண்டிய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், பயணியர் நிழற்குடையை தவிர்த்து, மரத்தின் நிழலில் காத்திருந்து, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள நிழற்குடையை இடித்து, புதிதாக கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்