மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் பங்களிப்புடன் தமிழக சுற்றுலாத்துறை, மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழாவை நடத்துகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான நாட்டிய விழா, கடந்த 22ம் தேதி துவங்கியது.
தினமும் மாலை 6:00 மணி முதல் பரதம், ஒடிசி, கதகளி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டியங்கள், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் என, ஜனவரி 20ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றன. நடன கலைஞர்கள் நடனமாடியும், நாட்டுப்புற கலைஞர்கள் கலாசார கலைகள் நிகழ்த்தியும், பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிகள், மேடையில் உள்ள பிரமாண்ட எல்.இ.டி. திரையிலும், அவசியமின்றி ஒளிபரப்பப்படுகிறது. மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், அந்த திரையில் ராட்சத உருவங்களாக தெரிகிறது. இது, நிஜ நிகழ்ச்சியை ரசிப்பதற்கு இடையூறாக உள்ளது. இதுஒருபுறமிருக்க, இந்திய நாட்டிய விழா என்ற தகவலுடன் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் படங்களும், நிகழ்ச்சிகளின் இடையே ஒளிபரப்பப்படுகிறது.
அதை காணும் சர்வதேச பயணிகள், முகம் சுளிக்கின்றனர். எனவே, இந்த எல்.இ.டி. திரையில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.