செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா வரும் பயணிகள் உணவு தேவைக்காக பிளாஸ்டிக் பொருட்களையே அதிகம் பயன்டுத்துகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அர்ச்சுணன் தபசு அருகில் மாமல்லபுரம் நகராட்சி மற்றும் யோகா கலைஞர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழச்சியில் பள்ளி சிறுவர்கள் பங்கேற்று நாடகம் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை பொருட்களை பயன்படுத்த கோரி சுற்றுலா வந்த பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குறிப்பாக சுற்றுலா வரும் பயணிகள் உணவு பண்டங்களை கொண்டு வரும்போது, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பாதம் இலை, மந்தார இலை, வாழை இலை பயன்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக மாமல்லபுரத்தில் அதிக பாதம் மரங்கள் உள்ளதால் அதன் இலைகளை பயன்படுத்துமாறும், அதனை நடைமுறை படுத்தும் வகையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு பாதம் இலைகளில் பழங்கள் வழங்கி வழிப்புணர்வு ஏற்படுத்தியதை காண முடிந்தது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் அரக்கன் போல சித்தரித்து, அதனை முகமூடி அணிந்து மாணவர்கள் நாடகம் நடத்தியதையும் காண முடிந்தது, நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.