காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமர்சையாக நடக்கும். அதன்படி, நடப்பாண்டுக்கான தை மாத பிரம்மோற்சவம், நேற்று காலை விமர்சையாக துவங்கியது. இதில், காலை 6:00 மணிக்கு கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவில் பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உலா வந்த உலகளந்த பெருமாள், பின் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவமான நாளை காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும் நடக்கிறது.