காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, பெருநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 34; கல் குவாரி மிஷின் ஆபரேட்டர். இவருக்கு சொந்தமான விவசாய நிலம், பெருநகர் அடுத்த, கீழ்நீர்க்குன்றம் பகுதியில் உள்ளது. இங்கு, அவரின் பெற்றோர் தங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பூபாலனின் பெற்றோர், நேற்று முன்தினம் மாலை, உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றுள்ளனர்.
இதையடுத்து, விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளை பராமரிக்க, பூபாலன் குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கீழ்நீர்க்குன்றம் விவசாய நிலத்திற்கு சென்றார். நேற்று காலை, பூபாலன் பெருநகர் வீட்டிற்கு குடும்பத்தோடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 24 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பூபாலன், பெருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.