காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் விடுமுறை நாட்களில்
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், கபடி உட்படபல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்
இந்நிலையில், மகளிருக்கு, மாதம் 1, 000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்ட துவக்க விழா, கடந்த மாதம் 15ல், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. முதல்வர்
ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
விழா நடந்த அரங்கத்தின் தரை மேடாக இருக்கும் வகையில், விளையாட்டு மைதானத்தில் பல இடங்களில் மண் எடுக்கப்பட்டது.
இதனால், மண் எடுக்கப்பட்ட இடத்தில் மழைநீர் குட்டைபோல தேங்குவதால், மைதானத்தில் முன்பு போல மாணவர்களால் விளையாட முடியவில்லை.
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவோருக்கு குட்டைபோல தேங்கியுள்ள மழைநீர் இடையூறாக உள்ளது.
எனவே, மழைநீர் தேங்காதவாறு மைதானத்தை சமன்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.