காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சென்னை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், திரிகால ஞானேசர் கோவில் மற்றும் நேர காப்பாளர் அலுவலகம் வழியாக சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், பயணியர் மட்டுமின்றி நேர காப்பாளர் அலுவலகத்திற்கு வந்து செல்லும்
போக்குவரத்து ஊழியர்களும், அதிகாரிகளும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனால், பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.