செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே, பள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி, 46. இவரது கணவர் துளசி ஜெயராம். இருவரும் மாமல்லபுரம் அருகே பையனூரில் உள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் நேற்று மாலை, 'பேஷன் புரோ' பைக்கில், உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க திருவள்ளூர் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில், காட்டுக் கூட்டுரோடு சந்திப்பு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறியதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஆதிலட்சுமி சாலையில் தவறி விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே ஆதிலட்சுமி உயிரிழந்தார்.
அவரது கணவர் துளசி ஜெயராம் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஆதிலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.