செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், திருக்கழுக்குன்றம் சாலையில் பகிங்ஹாம் கால்வாய் குறுக்கிடுகிறது. அதில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பாலங்கள் மிகவும் குறுகியதாகவும், அபாய வளைவுடனும் இருந்தன.
அவற்றுக்கு மாற்றாக, சற்று வடக்கில், புதிய பாலங்களை, நெடுஞ்சாலைத்துறை கடந்த 2019ல் கட்டியது. புதிய பாலங்களில், ஐந்து ஆண்டுகளாக வாகனங்கள் கடந்து வருகின்றன.
புதிய, பழைய பால சாலைகள், கிழக்கில் கருக்காத்தம்மன் கோவில் பகுதியிலிருந்து தனித்தனியே பிரிந்து, பாலங்களை கடந்து சற்று மேற்கில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மீண்டும் இணைகின்றன.
பிற இடங்களிலிருந்து, இந்நகரின் மேற்கு பகுதி வழியே வரும் வாகனங்கள், புதிய பாலை சாலை வழியாக, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் மைய பகுதிகளுக்கு செல்லலாம். பழைய பாலமும் பயன்பாட்டில் உள்ள நிலையில், அதன் வழியே, அண்ணா நகர், ஐந்து ரதங்கள் சிற்பங்கள், வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதிகளுக்கு செல்லலாம்.
இந்நிலையில், பாலங்களின் மேற்கு பகுதி சாலை பிரிவில், எந்த சாலையில் எப்பகுதிக்கு செல்லலாம் என்பதை அறிவிக்கும் வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை. அங்கு வாகனங்கள் நெருங்கியதும், எந்த சாலையில் தொடர்ந்து செல்வது என, வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர். அதுகுறித்து விசாரிக்க வாகனங்களை நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், விபத்து அபாயம் ஏற்படுகிறது.