செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை கலையரங்கில், உலக நோயாளிகள் பாதுகாப்பு தின விழா, கல்லுாரி முதல்வர் ராஜஸ்ரீ தலைமையில், நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று, பேசியதாவது:
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சுகாதாரத்தில் தமிழகத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளதற்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களுக்கு இணையாக, செவிலியர்கள் மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவர்கள் சிறப்பாக பணியற்றி வருவதற்கு, பாராட்டுகள்.
மருத்துவமனையில், செவிலியர் பணியிடம் காலியாக உள்ளதை நிரப்புவதற்கு, தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில், செவிலியர் பணியிடம் நிரப்பப்படும் என்றார்.
இதையடுத்து, மதுராந்தகம் அடுத்த கூடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் எழில்குமரன், 14, என்பவர், தன் இறப்பிற்கு பின், இரண்டு கண்களையும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்.
இந்த சேவையை பாராட்டி, அவரது குடும்பத்திற்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். மருத்துவமனை வளாகத்தில், 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் தீர்த்தலிங்கம், துணை இயக்குனர் பரணிதரன், அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் அரசு, ரங்கா மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அனுராதா உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.