செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் சென்னை அணுமின் நிலையம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில், ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் 1987 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. அதனால், மேற்கண்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் தலைவர் சின்ன கோவிந்தன் தலைமையில், கல்பாக்கம் நுழைவு வாயில் ரவுண்டான பகுதியில் சென்னை அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தும் மற்றும் அணுமின் கழக நிறுவன நாளான இன்றைய தின கொண்டாட்டங்களை புறக்கணித்து கருப்பு தினமாக கடைப்பிடித்து இன்று(செப்.19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கை நடைமுறைப் படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் 700 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.