செங்கல்பட்டு மாவட்டத்தில், வெளிமாநில தொழிலாளர்கள், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
தமிழ்நாட்டில், தற்காலிக அல்லது குறுகிய காலத்திற்கு புலம்பெயர்ந்து, அவர்களது சொந்த மாநிலத்தில், குடும்ப அட்டை இல்லாத வெளிமாநிலத்தவர்கள், eshram. gov. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். அந்த மனு, வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம், மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, புதிய குடும்ப அட்டை பெறப்படும்.
அதன்பின், தமிழ்நாட்டில், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ், நியாய விலை கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.
வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.