செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் - ஆப்பூர் சாலை 7 கி.மீ. தூரம் உடையது. இந்த சாலையை பேரமனூர், சட்டமங்கலம், ஆப்பூர், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீ பெரும்புதூர் சாலையின் இணைப்பு சாலை. தினமும் ஒரகடம், ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலையில் மறைமலை நகர் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. நேற்று இரவு அதிக அளவில் வாகன ஓட்டிகள் இந்த வழியாக சென்று வந்தனர். ஆறு ரயில்கள் அடுத்தடுத்து சென்றதால் ரயில்வே கேட் 30 நிமிடங்களுக்கும் மேலாக மூடப்பட்டது.
நீண்ட நேரம் காத்திருந்து கோபமடைந்த வாகன ஓட்டிகள் கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் வந்து வாகன ஓட்டிகளை சமாதானப்படுத்தி கேட்டை திறக்க வழி செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.