செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்தில் இன்று திரண்டனர். வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. குறிப்பாக வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள எழுவழுப்பான சறுக்கு பாறையில், குழந்தைகளுடன் சறுக்கி விளையாடி மகிழ்ந்ததை காண முடிந்தது. மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.