சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தில், சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்ற, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு தாசில்தார் சரோஜா, 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
கடந்த மாதம் 14ம் தேதி, பொன் தங்கவேலிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, சரோஜா, அவரது கணவரும், போலீஸ்காரருமான பிரவீன், மற்றொரு போலீஸ்காரர் அருண் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, நீலாங்கரை போலீசில் பொன் தங்கவேல் புகார் அளித்துள்ளார்.
அதில், 'அடையாறு, கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த ஜவகர் என்ற நபர் நேரடியாக வந்து, இனிமேல் நீ உயிரோடு இருந்தால் தானே புகார் கொடுப்பாய். எப்படி ஆக்கிரமிப்பை எடுக்கிறாய் என பார்க்கிறேன்' என, மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக, நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.