செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த நெல்லிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது, அம்மாபேட்டை கிராமம். இக்கிராமத்தில் கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில், பக்தராம், 49, என்பவர், நகை விற்பனை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை, இவரது நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
கடை அருகில் வசிப்போர், இதுகுறித்து பக்தராமிற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனே அவர் வந்து பார்த்த போது, கடையின் இரும்பு 'கேட்' மற்றும் 'ஷட்டர்' பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த கொலுசு உள்ளிட்ட 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதன் மதிப்பு, 4.5 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் மர்ம நபர்கள், கடையின் உள்ளே இருந்த பாதுகாப்பு அறையை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
அது முடியாததால் வெள்ளி பொருட்களை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இதனால், பாதுகாப்பு அறையில் இருந்த தங்க நகைகள் தப்பின. இதுகுறித்து பக்தராம் நேற்று முன்தினம் அளித்த புகாரின்படி, காயார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.