அக். 3ம் தேதி துவங்கும் நவராத்திரி விழாவையொட்டி கோயில், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கொலு பொம்மை வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இவ்விழாவையொட்டி சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இரவு, பகலாக நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விற்பனைக்கு தயாரான பொம்மைகளை உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காஞ்சிபுரத்திற்கு நேரடியாக வந்து தங்களுக்கு தேவையான நவராத்திரி பொம்மைகளை தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர். நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் வாயிலாக ஆர்டர் செய்கின்றனர்.
இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவைச் சேர்ந்த பொம்மை தயாரிப்பாளரும், கைவினை கலைஞருமான டி. செந்தில் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக சீசனுக்கேற்ப, விநாயகர், கிருஷ்ணர், அய்யப்பன் பொம்மைகளை தயார் செய்து வருகிறோம். நவராத்திரி கொலு வைப்பதற்கு என, கல்யாணம், கேரம், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு பொம்மை செட், சீமந்தம், காஞ்சி வரதர் கருடசேவை, அத்தி வரதர், கும்பகர்ணன், கடோத்கஜன், அஷ்ட லட்சுமி, தேச தலைவர்கள், கார்ட்டூன், காய்கறி, பழம், சந்தை, பூங்கா, தசாவதாரம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நவராத்திரி செட் பொம்மைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.