காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறையும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் - மக்காச்சோளம் இணைந்து, காஞ்சிபுரம் வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
இதில், வேளாண் துறை அலுவலர் விஜயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். வேளாண் துறை இணை இயக்குனர் முருகன் முன்னுரை ஆற்றினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வேளாண்மை ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சிறுதானியங்கள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பூச்சியியல் துறை இணை பேராசிரியர் சீனிவாசன், உழவியல் துறை இணை பேராசிரியர் கதிர்வேலன் ஆகியோர் தொழில்நுட்ப உரை ஆற்றினர். இதில், மக்காச்சோளம் சாகுபடி பற்றி விவசாயிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் முருகன் பேசுகையில், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்று பயிராக மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். ஊத்துக்காடு கிராமத்தில், விவசாயி ஒருவர் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.' மேலும் சில விவசாயிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். நாமக்கல் போன்ற தெற்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிரிடுகின்றனர்.