சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த, 30ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் காத்தவராயன் ஆரியமாலை திருக்கல்யாண வைபவம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து நேற்று தேர் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அலகு குத்துதல், காளிகோட்டை இடித்தல், தீமிதி உள்ளிட்டவைகள் நடந்தன.
அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு தேரில் எழுந்தருளிச் செய்த பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை கிராம மக்கள் செய்திருந்தனர்.