கள்ளக்குறிச்சி மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் மாசற்ற பொங்கல் விழா விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று துவக்கி வைத்தார். இதில் போகிப் பண்டிகையின் போது பழைய பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரித்த துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் என காற்று மாசுபடும் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாகனங்கள் நகரின் முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. முன்னதாக தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மாசு கட்டுபாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் ராம்குமார், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.