திருக்கோவிலுார் அடுத்த மேமாலுார் ஊராட்சியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து 136 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை அகற்றிட கடந்தாண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு மே மாதம் இந்த வீடுகளை அகற்ற பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையினர் முற்பட்டனர்.
அப்பொழுது குடியிருப்புவாசிகள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள 20 நாட்கள் அவகாசம் கேட்டனர்.
ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவில்லை. இதனையடுத்து 11-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பொதுப்பணித்துறையினர் வீடுகளை அகற்றும் பணியை நேற்று துவக்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த குடியிருப்புவாசிகளை போலீசார் கைது செய்து அங்கிருந்து அகற்றினர். தொடர்ந்து இப்பகுதியில் உள்ள வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் மேமாலுார் கிராமத்தில் திருக்கோவிலுார்-கள்ளக்குறிச்சி சாலையில் காலை 9: 30 மணியிலிருந்து பகல் 12 மணி வரை மறியலில் ஈடுபட்டனர்.
டி. எஸ். பி. , குகன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதித்தது.