கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் தற்போது 300 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கல்லுாரியில் பயிலும் மாணவ மாணவிகள் வசதிக்காக கல்லுாரிக்கு எதிரே விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இன்மையால் விளையாட்டு மைதானம் முழுவதும் புதர் மண்டியுள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மருத்துவ மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், அங்கு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், மருத்துவ பேராசிரியர்கள் நடைபயிற்சி, வாலிபால், பேட்மிட்டன் போன்றவற்றில் ஈடுபட ஆர்வம் செலுத்தினாலும் முறையான மைதானம் இன்மையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கல்லுாரிக்கு எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்து முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.