கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மணிமுக்தா ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் மணிமுக்தா ஆற்று அடிவார பகுதியான மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி, பாலப்பட்டு, சங்கராபுரம் வழியாக மணிமுத்தாறு அணையை வந்தடைகிறது. இந்த ஆற்றில் பாச்சேரி அருகே இரவு நேரங்களில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அனுமதியின்றி அதிகளவில் மணல் எடுத்து அருகில் உள்ள விவசாய நிலத்தில் குவித்து வைத்து பின் அந்த மணலை டிப்பர் லாரிகளில் ஏற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றில் மணல் அள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் மணல் மாபியாக்கள் மணல் அள்ளுவதை நிறுத்தாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.