சென்னிமலை மலைப்பாதையில் இன்று தடை விதிப்பு
சென்னிமலை முருகன் கோயில் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (புதன்கிழமை) முதல் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை ரூ. 6 கோடியே 70 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி காணொளி காட்சிமூலம் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து இதற்கான முதல் கட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது வடிகால் அமைக்கும் வசதியுடன் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்று 18-ந் தேதி (புதன்கிழமை) முதல் மலைப்பாதை வழியாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு வாகனங்கள்மூலம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னிமலை முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் படிக்கட்டு பாதையை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.